தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ட்விட்டரில் ஒரு பதிவைப் பகிர்ந்தாலும், அது திமுக அலுவலகத்தில் பூகம்பத்தை ஏற்படுத்துகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த 9 ஆண்டுகள் பாஜக செய்த சாதனையை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்கிறார். இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரத்தில் தொடங்கி வைத்தார். இதில், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் பங்கேற்றனர்.
அமித் ஷா பேசியதாவது
தமிழகத்தில் பாஜக சார்பில் நடைபெறும் இந்த நடைப்பயணம் வெறும் அரசியல் சார்ந்த பயணம் மட்டுமல்ல, பழைமையான தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பயணமாகவும், நாட்டிலுள்ள 130 கோடி மக்களின் மனதில் தமிழகத்தின் பாரம்பரியத்தையும், தமிழின் பெருமையையும் புதிய வைக்கும் பயணமாகவும் இருக்கும்.
தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றும் பயணமாகவும், ஊழலை முடிவுக்குக் கொண்டு வரும் பயணமாகவும், ஏழைகளின் நலன் காக்கும் அரசை உருவாக்கும் பயணமாகவும் இது அமையும்.
தமிழ் மொழி மீதும் தமிழகத்தின் பாரம்பரிய, கலாசாரங்கள் மீதும் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை, ஜி20 மாநாடு என உலகளவிலான அனைத்து நிகழ்வுகளிலும் பிரதமர் தமிழின் பெருமையைப் பறைசாற்றியுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க வட இலங்கையில் ரூ.120 கோடியில் கலாசார மையம் அமைத்தது, மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை இந்திய தேசிய மொழிகள் தினமாக அறிவித்தது, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழகத்தின் செங்கோலை நிறுவியது என பல்வேறு தமிழ்ப் பணிகளை பிரதமர் ஆற்றியுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் அழியவும், இந்திய மீனவர்கள் கொல்லப்பட காரணமாக இருந்ததும் இந்தக் கூட்டணிதான் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து தொடங்கியுள்ள ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள தலைவர்கள் யாருக்கும் நாட்டின் நலன் மீதும், மாநில நலன் மீதும் அக்கறை கிடையாது. அந்தக் கூட்டணிகள் உள்ள தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் தன்மகன், மகள், மருமகன், மருமகள் பதவிக்கு வர வேண்டும் என்பது மட்டும் தான் நோக்கும்.
தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ட்விட்டரில் ஒரு பதிவைப் பகிர்ந்தாலும், அது திமுக அலுவலகத்தில் பூகம்பத்தை ஏற்படுத்துகிறது.
168 நாள்கள் நடைபெறும் இந்த நடைப்பயணத்தின் நிறைவில், பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும், அதனுடன், தமிழகத்திலும் மாற்றம் வரும் என்றார் அவர்.