இந்தியாவின் பிரம்மாண்ட ஜனநாயக திருவிழா என்று அழைக்கக் கூடிய நாடாளுமன்ற தேர்தல், வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கப்பட்டு, ஜூன் 1-ஆம் தேதியோடு முடிவடைகிறது.
7 கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தலில், 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதை, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி இலக்காக கொண்டுள்ளது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “வேலைவாய்ப்பு பற்றியும், மாணவர்கள் பற்றியும், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் பற்றியும், பிரதமர் மோடி பேசாமல் இருக்கிறார். கிராமங்கள் மற்றும் ஏழை மக்கள் பற்றியும் அவர் பேசாமல் இருக்கிறார்.
கல்வி, சுகாதாரம், பள்ளிகள், மருத்துவமனைகள் குறித்தும் அவர் பேசவில்லை. இப்படி இருக்கும்போது, 400 தொகுதிகளை வெல்வதில் என்ன பயன் உண்டு” என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து தனது பதிவில் கருத்து கூறிய அவர், “உண்மையான பிரச்சனைகள் குறித்து மோடி ஜி பேசவில்லை என்றால், 400 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை அவர் மறந்துவிட வேண்டியது தான்.
அதன்பிறகு, 100 தொகுதிகளில் கூட அவர்களால் வெற்றி பெற முடியாது. எனவே, பிரதமர் மோடி பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநிலத்தின் ஜமூய் பகுதிக்கு வந்திருந்தார். அதன்பிறகு, கடந்த சனிக்கிழமை அன்று, தேஜஸ்வி யாதவ், செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.
அப்போது, “ஜமூய் தொகுதிக்கு நாங்கள் செல்ல உள்ளோம். பிரதமர் மோடி ஜமூய் தொகுதிக்கு சென்றபோது, குடும்ப அரசியல் குறித்து அவர் பேசவில்லை.
ஏனென்றால், அவர்களது கட்சியின் குடும்ப உறுப்பினர்களில் இருந்தே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜமூய் தொகுதியின் வளர்ச்சிக்காக, பிரதமர் நரேந்திர மோடி செய்த விஷயங்கள் குறித்தாவது அவர் சொல்லியிருக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.