NDTV ஊடகத்திற்கு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த முறை கிழக்கு இந்தியாவில் தனது கால்தடத்தை பாஜக பதிக்கும் என்றும், இதன்மூலம், 400 தொகுதிகள் என்ற இலக்கை, NDA கூட்டணி எளிதில் அடையும் என்றும் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, பாஜக மாடல் ஆட்சி பற்றியும், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பான தன்னுடைய அர்ப்பணிப்பு பற்றியும் அவர் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் வேளையில், அரசியல் கட்சி தலைவர்கள் மும்மரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருசிலர் தங்களது நலத்திட்டங்களை முன்வைத்தும், ஒருசிலர் மற்ற கட்சியினரை குற்றஞ்சாட்டியும், பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, பீகார் மாநிலம் பாட்னாவில், பாஜக சார்பில் ரோடு ஷோ நடத்தப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டார். அப்போது, NDTV ஊடகத்திற்கு அவர் பேட்டி அளித்திருந்தார்.
அந்த பேட்டியில், கிழக்கு இந்தியாவில் பாஜகவின் வளர்ச்சி குறித்து, செய்தியாளர் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரதமர், “என்னுடைய 2013-ஆம் ஆண்டு பேச்சை நீங்கள் கவனித்திருந்தால், அதில் நான் குறிப்பிட்டிருப்பேன். அப்போது நான் பிரதமர் வேட்பாளர் கூட கிடையாது.
இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், கிழக்கு இந்தியாவை முதலில் வளர்ச்சி அடைய வைக்க வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்திய நாட்டிற்கு, ஆட்சி நடத்தும் மாடலை, பாஜக அரசு தந்துள்ளது” என்றும் கூறினார். சுகாதாரம் மற்றும் கட்டுமானம் தொடர்பான துறைகளில், பாஜக சாதனைகள் குறித்து பேசிய மோடி, “அதன் விளைவு, கிழக்கு இந்தியாவில் எதிரொலிக்கும்” என்று கூறினார்.
பெண் வாக்காளர்கள் தொடர்பான கேள்விக்கு, “ நாம் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். நாங்கள் இந்திய ராணுவத்தின் கதவை, பெண்களுக்காக திறந்துள்ளோம். சியாச்சன் பகுதியில், எங்களுடைய மகள்கள் இந்தியா நாட்டை பாதுகாத்து வருகிறார்கள்” என்று உணர்ச்சிப் பொங்க கூறினார்.