Connect with us

Raj News Tamil

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அரசியல்

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில்,

பாஜக ஏன் வரவே கூடாது?

தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம்.

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது.

தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.

மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் – கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்! வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள்.

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!

பாசிசத்தை வீழ்த்த – ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top