“நான் பாதி ரஜினிகாந்த்” – மேடையில் சொன்ன சிவகார்த்திகேயன்!

என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில், கௌதம் கார்த்திக் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆகஸ்டு 16 1947. சுதந்திரம் அடைந்தது தெரியாமல் இருக்கும் ஒரு கிராமத்தை பற்றிய கதை இது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில், கௌதம் கார்த்திக், என்.எஸ்.பொன்குமார், ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும், இயக்குநர் என்.எஸ்.பொன்குமாரை பாராட்டிய அவர், “முதல் படத்திலேயே ஒரு சரித்திர கதையை அவர் தேர்வு செய்துள்ளார். அவர் சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளார் என்பதை தான் இது காட்டுகிறது. சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ள நபர், சாதிக்க தகுதியான நபர்..” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கௌதம் கார்த்திக்கின் நடிப்பு குறித்து, அவருடைய தந்தை கார்த்திக் குறித்து பேசியிருந்தார். மேலும், “ யாருடைய சாயலும் இல்லாமல் நடிக்கக் கூடிய நபர் தான் கார்த்திக். மற்ற அனைவருக்கும் வேறொரு நடிகரின் சாயல் இருக்கும்.. அதேபோல், எனக்கும் நடிகர் ரஜினிகாந்தின் பாதி சாயல் இருக்கும். ஆனால், கார்த்திக்கின் நடிப்பு தனித்துவமானதாக இருக்கும்” என்று கூறினார்.