வாக்காளர்கள் ஓட்டளித்துவிட்டார்கள் என்ற அடையாளத்திற்காக தேர்தல் ஆணையம் சார்பில் ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாக அழிந்துவிடும். ஆனால் கேரளாவில் உஷா என்ற 62 வயது பெண் ஒருவருக்கு விரலில் வைத்த மை 9 ஆண்டுகளாக அழியாமல் இருப்பதால் அவர் வாக்கு செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்.
கடைசியாக உஷா கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டளித்தபோது அவருக்கு மை வைக்கப்பட்டது. அதன்பிறகு, அந்த மை நீண்ட நாட்களாகியும் அழியாததால் குழப்பமடைந்தார். அதன் பிறகு நடந்த தேர்தலின் போது அதிகாரிகள் ஏற்கனவே மை அடையாளம் இருப்பதை பார்த்து அவரை வாக்கு செலுத்த அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில் இன்று கேரளாவில் நடைபெற்ற தேர்தலில் வாக்கு செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளார். 9 ஆண்டுகளாக மை அழியாமல் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.