Connect with us

Raj News Tamil

2023-ல் நடந்த சுவாரசிய நிகழ்வுகள் என்னென்ன?

இந்தியா

2023-ல் நடந்த சுவாரசிய நிகழ்வுகள் என்னென்ன?

ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு விதமான சுவாரசிய தகவல்களையும், செய்திகளையும் தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளது. அந்த ஆண்டு முடியும்போது, அந்த ஆண்டில் நடைபெற்ற சுவாரசிய தகவல்களை நினைவுகூர்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், உலகம், இந்தியா, தமிழகம், விளையாட்டு ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பதை, தற்போது காண்போம்,..

தமிழகம் பிரிவில்:-

மரணம்:-

தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகித்த கேப்டன் விஜயகாந்த் மற்றும் மார்க்சிஸ் கம்யூனிஸ் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் சங்கரய்யா காலமாகினர்.

புயல்:-

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்தாலே அச்சத்தில் இருக்கும் சென்னை வாசிகளுக்கு, இந்த ஆண்டும் அந்த அச்சம் தொடர்ந்தது. ஆம், 2023-ஆம் ஆண்டில், மிக்ஜாம் என்ற புயல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுார் ஆகிய 4 மாவட்டங்களில், பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, சென்னையில் மக்கள் பெரும் பாதிப்படைந்தனர்.

அதிர்ச்சி தரும் கைது:-

ஊழல் வழக்குகளில், முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படுவது, தமிழக அரசியல் வரலாற்றில், ஆங்காங்கே நடைபெற்றிருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு, பதவியில் இருந்த சமயத்திலேயே, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியும், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும் ஊழல் வழக்கில் சிக்கினர். இதில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், பொன்முடிக்கு தண்டனையே உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மேல்முறையீட்டிற்கு தற்போது காத்துக் கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கிலும், பொன்முடி அளவுக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கிலும் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் மாளிகையில் தாக்குதல்:-

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி வகித்து வருகிறார். இவரது மாளிகை முன்பு, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், பெட்ரோல் குண்டு வீசி, தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த மர்ம நபரை கைது செய்தனர்.

சிறப்பான சில திட்டங்கள்:-

மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், மகளிருக்கான விடியல் பயணம் திட்டம் ஆகிய முற்போக்கான சில திட்டங்கள், திமுக அரசால் உருவாக்கப்பட்டது. இந்த திட்டங்களுக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓசி பேருந்துல போறீங்க:-

சில நல்ல திட்டங்கள் உருவான இதே ஆண்டில் தான், அந்த திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில், அதே அரசின் கீழ் இயங்கும் அமைச்சர் பேசினார். அதாவது, திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பொன்முடி, “ஓசி பஸ்-ல போறீங்க” என்று பேசி சர்ச்சையை பில் போட்டு வாங்கினார்.

வேங்கை வயல் மற்றும் நாங்குநேரி சம்பவம்:-

தமிழக அளவில் பார்க்கும்போது, 2023-ஆம் ஆண்டு நடந்த மிகவும் கேவலமாக சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. வேங்கை வயல் பகுதியில், தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில், சமூக விரோதிகள் மூலம், மலம் கலக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம், சமூக நீதி மண்ணாக இருக்கும் தமிழ்நாடு, எவ்வளவு பின்னோக்கி உள்ளது என்பதை, ஒருமுறை நிரூபித்தது. இதேபோல், நாங்குநேரியில், பள்ளியில் படித்து மாணவனை, சக மாணவர்கள், அரிவாளை கொண்டு கொடூரமாக தாக்கிய இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் ரணத்தையே ஏற்படுத்தியிருந்தது. இந்த இரண்டு சம்பவங்களும், தமிழக அளவில், கடந்த ஆண்டு நடந்த மிகவும் மோசமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

விளையாட்டு:-

சச்சின் சாதனையை முறியடித்த கோலி:-

கிரிக்கெட் போட்டியின் கடவுள் என்று அனைவராலும் அழைக்கப்படுவர் சச்சின் டெண்டுல்கர். இவர் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்து சாதனை படைத்திருந்தார். இந்த அபார சாதனையை தன் வாழ்நாள் முழுவதும் விளையாடி சச்சின் படைத்திருந்தார். ஆனால்,அந்த சாதனையை விராட் கோலி, பாதி கிரிக்கெட் வாழ்க்கையிலேயே கடந்துவிட்டார்.

உலகக் கோப்பையில் இந்தியா தோல்வி:-

உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி என்பது, கடந்த ஆண்டு மறக்க முடியாத ஒரு சம்பவங்களில் ஒன்றாக உள்ளது. காரணம் என்னவென்றால், அனைத்து போட்டிகளிலும், சிறப்பாக விளையாடிய இந்திய அணி, இறுதிப் போட்டியிலும், வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டை பறிக்கொடுத்த இந்தியா, வெறும் 240 ரன்களை மட்டுமே எடுத்தது. அதன்பிறகு விளையாடிய ஆஸ்திரேலியா, எளிதாக இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

இந்தியா:-

மனிஷ் சிசோடியா கைது:-

டெல்லி துணை முதல்வராகவும், ஆத் ஆத்மி கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்த மனிஷ் சிசோடியா, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிக்கியிருந்தார். இந்த வழக்கில், இவர் மீதான ஆதாரம் நிரூபிக்கப்பட்டதால், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தியா கூட்டணி உருவாக்கம்:-

நாடு முழுவதும் வலுவாக உள்ள பாஜக-வை தகர்ப்பதற்காக, எதிர் கட்சியினர் ஒட்டுமொத்தமாக சேர்ந்து, இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கினார்கள். இந்திய தேசிய மேம்பாட்டை உள்ளடக்கிய கூட்டணி என்று கூறப்படும் இதில், நாடு முழுவதும் உள்ள அனைத்து எதிர்கட்சியினரும், ஓர் அணியில் திரண்டனர்.

ரூ.2000 நோட்டுக்கள் செல்லாது:-

500, ஆயிரம் நோட்டுக்கள் மூலமாக தான் கருப்புப் பணம் வலுவாக உள்ளது. எனவே, அதனை ஒழித்தால், கருப்புப் பணம் இல்லாமல் போய்விடும் என்று பாஜக அரசு கூறியது. இதனால், 500, ஆயிரம் நோட்டுக்கள் செல்லமால் ஆக்கப்பட்டு, புதிய 500 ரூபாய் நோட்டுக்களும், 2000 ரூபாய் நோட்டுக்களும் உருவாக்கப்பட்டது. ஆனால், இதில் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் வந்த சில வருடங்களிலேயே கொஞ்சம் கண்ணில் தென்படுவது குறைந்தது. இவ்வாறு இருக்க, கடந்த ஆண்டு தான், 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசால் கூறப்பட்டது.

மணிப்பூர் விவகாரம்:-

மைதேயி மற்றும் குகி ஆகிய இரண்டு பழங்குடியின மக்களுக்கு இடையே, எஸ்.டி அந்தஸ்து தொடர்பாக பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் விளைவாக, இரண்டு பெண்கள் கற்பழிக்கப்பட்டு, நிர்வாணம் ஆக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பில்கிஸ் பானு வழக்கு:-

2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில், பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதுதொடர்பான வழக்கில், 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் சிறைத் தண்டனை பெற்று வந்தனர். ஆனால், அவர்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் தேதி விடுதலை வழங்கப்பட்டது.

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் பின்னணடைவு:-

இந்தியா கூட்டணி உருவாகி, காங்கிரஸ் சந்தித்த மிகவும் முக்கியமான தேர்தலாக இது பார்க்கப்பட்டது. இந்த தேர்தலின் முடிவுகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதால், பலரும் எச்சரிக்கையுடன் வேலை பார்த்தனர். ராஜஸ்தான், மிசோரம், சட்டீஸ்கர், தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில், 3 மாநிலங்களில் பாஜகவே வெற்றி பெற்றது. இதில், தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மேலும், மிசோரம் மாநிலத்தில், அப்பகுதியின் மாநில கட்சியான மிசோரம் மக்கள் இயக்கம் வெற்றியை பெற்றது. 5 மாநிலங்களில் பலத்த தோல்வியை பெற்றதால், இந்தியா கூட்டணி பலம் குறைந்ததாக கருதப்பட்டது.

More in இந்தியா

To Top