இந்தித் திணிப்பு நடவடிக்கை: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!

மத்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர், நேற்று காலை கூடியது. மறைந்த தலைவர்கள் உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் நாளை வரை மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அறிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

இதனிடையே இந்தியாவில் கல்வி நிலையங்களில் இந்தி உள்ளிட்ட மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழு பரிந்துரைக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

குழுவின் பரிந்துரையை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடிதம் எழுதினார். இந்நிலையில் இன்று இந்தித் திணிப்பு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.