சென்னை அயனாவரம், கே.எச்.ரோடு பகுதியில் அமராவதி(88) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் முகமுடி அணிந்த மர்ம நபர் ஒருவர் இவரது வீட்டிற்க்குள் நுழைந்து, மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினார்.
இதுகுறித்து அயனாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செயினை பறித்து சென்றவர் அரும்பாக்கம், ஜெய் நகரைச்சேர்ந்த பாபு(35) என்பதை போலீசார் கண்டறிந்தனர். அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 8 பவுன் தங்க செயினை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்தனர்.
இதேபோன்று அரும்பாக்கம் பகுதிகளிலும் மூதாட்டிகளிடம் தங்க நகைகளை திருடிய குற்ற வழக்குகளில் பாபு சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. சம்பவம் நடந்து 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த தனிப்படையினரை காவல் ஆணையர் பாராட்டினார்.