ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு மற்ற மாநிலங்களில் விடுமுறை அளிப்பது போல தமிழ்நாட்டிலும் விடுமுறை அளிக்கப் பட வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது ஐந்து இடத்திலாவது பா.ஜ.க வின் சின்னமான தாமரையை வரைய வேண்டும் என இலக்கு நிர்ணயித்து கட்சி நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ராமருக்கும் தமிழகத்திற்கும் பாரம்பரியம் மிக்க, கலாச்சார ரீதியான இணைப்பு உள்ளது. இங்கு வழிபாடு செய்து அயோத்திக்கு பிரதமர் செல்வது தமிழகத்திற்கு பெருமை அளிப்பதாகும்.
அரசு நிகழ்ச்சிகளில் பிரதமரும் முதல்வரும் கலந்து கொள்வது இயல்பு தான். அதை கூட்டணி என பார்க்க முடியாது. மழை வெள்ள பாதிப்புகளுக்கு தேவையான தொகையை உடனடியாக பிரதமர் வழங்கி உள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு மற்ற மாநிலங்களில் விடுமுறை அளிப்பது போல தமிழ்நாட்டிலும் விடுமுறை அளிக்கப் பட வேண்டும். தி.மு.க. எம்.எல்.ஏ மகன் வீட்டில் பட்டியல் இனப்பெண் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப் பதை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.