தரமான பால் உற்பத்தி செய்து வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு லிட்டா் ஒன்றுக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
அவர் வெளிட்ட அறிக்கை தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளா்களுக்கு பாலில் உள்ள கொழுப்பு மற்றும் இதர சத்துகள் அடிப்படையில் கொள்முதல் விலை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அதிகபட்சமாக கொழுப்பு 5.9சதவீதம் மற்றும் இதர சத்துகள் 9 சதவீதம் உள்ள பாலுக்கு லிட்டருக்கு ரூ.40.95 வரை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சில பால் உற்பத்தியாளா்கள் வழங்கிய பால் மாதிரிகளை சோதனை செய்த போது அதில் 6 சதவீதத்திற்கும் மேல் கொழுப்புச் சத்து இருப்பது தெரியவந்தது.
அதன்படி அதிக கொழுப்புச் சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக 7.5 சதவீதம் வரை கொழுப்புச்சத்து தரப்பட்டியல் உயா்த்தப்பட்டு பால் கொள்முதல் விலைப்பட்டியல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பால் வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும்.
தரமான பால் உற்பத்தி செய்து வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு லிட்டா் ஒன்றுக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. நடப்பாண்டில் பால் உற்பத்தியாளா்களுக்கு நிகர இலாபத்தில் ஈவுத்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட உள்ளது. விவசாயிகளுக்கு கால்நடைகள் வாங்குவதற்கும், பராமரிப்பதற்கும் கடன் வசதி வழங்குவது போன்ற திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படத் தொடங்கியுள்ளன.
மேலும் கால்நடைகளுக்கு காப்பீடு திட்டம், மருத்துவ உதவி மற்றும் செயற்கை முறை கருவூட்டல் போன்ற சேவைகளும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பால் உற்பத்தி வரும் மாதங்களில் கணிசமாக பெருகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.