Connect with us

Raj News Tamil

பேருந்தில் பலகை உடைந்த சம்பவம்: இபிஎஸ் கண்டனம்!

தமிழகம்

பேருந்தில் பலகை உடைந்த சம்பவம்: இபிஎஸ் கண்டனம்!

சென்னை அமைந்தகரையில் ஓடும் மாநகரப் பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து பெண் ஒருவர் சாலையில் விழுந்த சம்பவத்திற்கு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

சென்னை அமைந்தகரையில் ஓடும் மாநகரப் பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து பெண் ஒருவர் சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

ஆட்சிக்கு வந்தது முதலே எந்த ஒரு புதிய பேருந்துகளையும் வாங்காமல், தரமற்ற, பயன்பாட்டிற்கு தகுதியற்ற பேருந்துகளுக்கெல்லாம் பிங்க் நிற பெயிண்ட் பூசி “மகளிர் இலவசப் பேருந்து” என்ற பெயரில் இயக்கி பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தான நிலையினை உருவாக்கியிருக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி பஸ் இலவசம் என்பதை தாண்டி , மக்களுக்கு மாவுகட்டும் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை, மக்கள் இவர்கள் ஆட்சியில் உயிர்பிழைத்து வாழ்வதே மாபெரும் சாதனை என்ற நிலையிலே தான் இன்றைய விடியா திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் இருக்கின்றன என்பதற்கு இம்மாதிரியான நிகழ்வுகள்தான் சாட்சி.

தமிழ்நாடு முழுக்க இயக்கப்படும் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமானப் பேருந்துகளில் பெரும்பாலானவை தரமற்ற முறையிலே இருப்பதனை இதுபோன்ற தொடர் விபத்துகள் உணர்த்துகின்றன.

மக்களைப் பாதுகாப்புடன் உரிய இடத்திற்கு கொண்டுசேர்க்கும் வண்ணம், புதிய பேருந்துகள் வாங்கி, ஏற்கனவே உள்ள பேருந்துகளுக்கு உரிய தரப் பரிசோதனைகள் மேற்கொண்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணம் வழங்குவதை உறுதிசெய்யுமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

More in தமிழகம்

To Top