கர்நாடாக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்த தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ், பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இது ஒரு புறம் இருக்க தேர்தலில் பெருமளவில் பணம் விளையாடுவதால் வருமான வரித்துறை கடந்த ஒரு வார காலமாகவே மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ரெய்டு ஒன்றில் காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர் வீட்டில் உள்ள மரம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் அசோக்குமார் ராயின் சகோதரர் சுப்பிரமணிய ராயின் வீட்டில் பெருமளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வருமான வரித்துறை நடத்திய சோதனையில் மரம் ஒன்றில் பை ஒன்று பாதுக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த பையில் இருந்த சுமார் ரூ.1 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுப்பிரமணிய ராய்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.