காச நோயை 2025-ஆம் ஆண்டுக்குள்ளாகவே ஒழிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜி20 நாடுகளின் சுகாதார அமைச்சா்களுக்கான கூட்டம் குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று நடைபெற்றது. அதில் காணொலி வழியாகக் கலந்துகொண்ட பிரதமா் மோடி கூறியதாவது:
சா்வதேச சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள், எண்ம சுகாதார முன்னெடுப்புகளைப் பொதுவான தளத்தின் கீழ் கொண்டுவந்துள்ளன. மக்கள் அதிக அளவில் பலன் பெறும் நோக்கில் புத்தாக்கங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். புத்தாக்க நடவடிக்கைகளில் போலியான நிதியுதவி வழங்கப்படுவதும், ஒரே திட்டங்களுக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்து நிதி வழங்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டும்.
அனைத்து நாடுகளுக்கும் நவீன தொழில்நுட்பங்கள் சமமாகக் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். சுகாதார சேவைகளை எண்ம வழியில் வழங்குவதில் தெற்குலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அதன் மூலம் தீா்வு எட்டப்படும். சா்வதேச சுகாதார ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான இலக்கை அடையவும் இந்த நடவடிக்கை உதவும்.
உலகின் குறிப்பிட்ட பகுதியில் நிகழும் சுகாதார அவசரநிலையானது, மற்ற பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கரோனா தொற்றுப் பரவல் எடுத்துக்காட்டியது. கரோனா தொற்றுப் பரவல் போன்ற அடுத்த சுகாதார அவசர நிலையைத் தடுப்பது, எதிர்கொள்வது, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்கான தயார் நிலையை ஒருங்கிணைந்து ஏற்படுத்த வேண்டும்.
சுகாதார விவகாரங்களில் அனைத்து நாடுகளும் ஒ பணியாற்ற வேண்டும். 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 30 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது. நாட்டில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
காச நோயை 2030-ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், காச நோயை 2025-ஆம் ஆண்டுக்குள்ளாகவே ஒழிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை எட்டுவதற்காக இந்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், மக்கள் இயக்கமாக மாறியுள்ளன. ‘காச நோய் ஒழிப்புக்கான நண்பா்கள்’ என்ற திட்டத்தின் கீழ் காசநோயாளிகளைத் தத்தெடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்திட்டத்தின் கீழ் சுமார் 10 லட்சம் காச நோயாளிகள் இதுவரை மக்களால் தத்தெடுக்கப்பட்டுள்ளனா். சா்வதேச இலக்குக்கு முன்கூட்டியே காச நோயை ஒழிப்பதற்கான பாதையில் இந்தியா வெற்றிகரமாகப் பயணம் மேற்கொண்டு வருகிறது என்றார் பிரதமா் மோடி.