இங்கிலாந்தை பழி தீர்த்த இந்தியா: இறுதி போட்டிக்கு நுழைந்தது!

டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதல் பேட்டிங்கில் இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக விராட் கோலி 9 ரன்களிலும், ரிஷப் பண்ட் 4 ரன்களிலும் வெளியேறி அதிர்ச்சி தந்தனர்.

8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களை இந்திய அணி குவித்து இருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் போட்டி சற்று நிறுத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் போட்டி தொடங்கிய போது களத்தில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் ரன்களை சீராக உயர்த்தினர்.

கேப்டன் ரோகித் சர்மா 39 பந்துகளில் 57 ரன்கள் குவித்து இருந்த போது அடில் ரஷித் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 47 ரன்கள் குவித்து இருந்த போது ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

இதனை தொடர்ந்து பின்னர் வந்த பாண்டியா அதிரடியாக 13 பந்துகளில், 23 ரன்னும், ஜடேஜா 9 பந்தில் 17 ரன்னும் சேர்த்து இந்திய அணியின் ரன்னை அதிகரித்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்துள்ளது.

172 ரன்கள் இங்கிலாந்து அணி குவித்தால் 2024 டி20 உலக கோப்பையின் இறுதிப் போட்டி இங்கிலாந்து அணி தகுதி பெறும்.

இதனை தொடர்ந்து 172 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் சால்ட் முதன்மை ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

கேப்டன் ஜோஸ் பட்லர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி, 15 பந்துகளில் 4 பவுண்டரிகள் விளாசி 23 ரன்கள் குவித்தார்.

ஆனால் அக்சர் படேல் வீசிய 4 ஓவரின் முதல் பந்தில் விக்கெட் கீப்பர் பண்ட்-யிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சால்ட் பும்ரா வீசிய 4 ஓவர் 4வது பந்தில் வெறும் 5 ரன்கள் சேர்த்து இருந்த போது போல்ட் ஆகி வெளியேறினார்.

பின்னர் வந்த மொயின் அலி(8) ஜானி பேர்ஸ்டோவ்(0), சாம் கரன்(2), லியாம் லிவிங்ஸ்டன்(11) என அனைவரும் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து இங்கிலாந்து ரசிகர்களை சோகத்தில் தள்ளினர்.

அதிகபட்சமாக ஹரி ப்ருக் மட்டும் (25) ரன்கள் குவித்து குல்தீப் பந்தில் அவுட்டானார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 16.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே குவித்து அரையிறுதியில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது.

அதே சமயம் இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் T20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது.

RELATED ARTICLES

Recent News