Connect with us

Raj News Tamil

மணிப்பூர் ஆளுநரை சந்தித்த ‘இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள்!

இந்தியா

மணிப்பூர் ஆளுநரை சந்தித்த ‘இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள்!

இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இண்டியா’ சார்பில் 20 எம்.பி.க்கள் அடங்கிய குழு அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை இன்று சந்தித்தனர்.

மணிப்பூரில் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவது தொடா்பாக உண்டான மோதல் வன்முறையாக மாறி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

கடந்த மே மாதம் நடந்த சம்பவத்தில் பழங்குடி பெண்களை ஆடைகள் ஏதுமின்றி மைதேயி சமூக ஆண்கள் இழுத்துச் செல்லும் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தின் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என பிரதமா் பேசினார். எனினும், மணிப்பூா் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும், விவாதத்தில் பங்கேற்று பிரதமா் விளக்கமளிக்கவும் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் மணிப்பூர் சென்றுள்ள இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை இன்று சந்தித்தனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை எம்.பி.க்கள் நேற்று சந்தித்த நிலையில் இன்று ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதற்கிடையே மணிப்பூரில் மே 4ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தாயாரையும் எம்.பி.க்கள் குழு சந்தித்தனர்.

More in இந்தியா

To Top