Connect with us

Raj News Tamil

“இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும்” – அமித்ஷாவின் வீடியோ வைரல்! அளிக்கப்பட்ட புகார்!

இந்தியா

“இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும்” – அமித்ஷாவின் வீடியோ வைரல்! அளிக்கப்பட்ட புகார்!

நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை என்பது புயல் வேகத்தில் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் நிச்சயம் வென்றாக வேண்டிய சூழலில் காங்கிரஸ் கட்சியும், 3-வது முறையாக வெற்றியை சுவைக்க வேண்டும் என்ற ஆசையில், பாஜகவும் போராடி வருகின்றன.

இந்நிலையில், ஜார்கண்ட மாநில காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில், பொதுக்கூட்டம் ஒன்றில் அமித்ஷா பேசிய வீடியோ ஒன்று பதிவிடப்பட்டது. அந்த வீடியோவில் “மீண்டும் பாஜக அரசு அமைக்கப்பட்டால், OBC, SC, ST ஆகியோருக்கான இடஒதுக்கீடு ஒழிக்கப்படும்” என்று அமித் ஷா பேசியிருப்பதாக, காட்டப்பட்டுள்ளது.

இது இணையத்தில் வெளியாகி, வைரலாகவும் பரவ ஆரம்பித்தது. இவ்வாறு இருக்க, பாஜக கட்சி சார்பிலும், உள்துறை அமைச்சகம் சார்பிலும், டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில், புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

அதில், இது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்றும், அரசியலமைப்புக்கு எதிராக முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என்று தான், அவர் அந்த வீடியோவில் பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரைத் தொடர்ந்து, பிரிவு 153, 153A, 465, 469, 171G மற்றும் 66C ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான விசாணை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாஜகவின் மூத்த தலைவர் அமித் மல்வியா இதுகுறித்து பேசியுள்ளார். அதன்படி, “எடிட் செய்யப்பட்ட வீடியோவை காங்கிரஸ் கட்சி பரப்பி வருகிறது. இது முற்றிலும் போலியான வீடியோ மற்றும் இது பெரிய அளவிலான வன்முறையை ஏற்படுத்தக் கூடிய வீடியோ ஆகும்.

பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களின் பங்குகளை குறைத்துக் கொண்டு, அரசியலமைப்புக்கு எதிராக, மதத்தின் அடிப்படையில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என்று தான் அமித்ஷா பேசியிருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் பல்வேறு செய்தித் தொடர்பாளர்கள், இந்த வீடியோவை பதிவு செய்துள்ளனர். சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அவர்கள் நிச்சயம் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

More in இந்தியா

To Top