தலைநகர் டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில், மோடியின் உத்தரவாதம் என்ற பெயரில், பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் நநேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலக அமைதியின்மை மற்றும் போர்கள் நடந்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியாவுக்கு நிலையான அரசாங்கம் தேவை என்றும், இந்தியாவை உலக உற்பத்தி மையமாக மாற்றுகிறேன் என்றும் உறுதி மொழி அளித்தார்.
மேலும், போர் நடந்துக் கொண்டிருக்கும் பகுதிகளில், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தான், பாஜகவின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர், நாட்டின் நலனுக்காக, எப்போதும் சவாலான, தைரியமான முடிவுகளை, பாஜக அரசு எடுத்துள்ளது. கட்சியை விட, நாட்டுக்கே அதிக முக்கியத்துவத்தை பாஜக அளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், பாஜகவின் கடைசி 10 வருட ஆட்சியில், கீழ்நிலையில் இருந்த இந்தியாவின் பொருளாதாரம், உலகின் முதல் 5 இடங்களுக்கு வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “2014-ஆம் ஆண்டு அன்று, நிரந்தரமான மாற்றத்திற்கு, மக்களின் ஆதரவை, பாஜக பெற்றது. 2019-ல் இன்னும் பெரிய வெற்றியை பாஜக பெற்றது மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்தது.
மேலும், பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டது. உங்களின் ஆசிர்வாதத்துடன், அடுத்த 5 ஆண்டுகளில், நாங்கள் 24 மணி நேரமும் வேலை பார்க்க உள்ளோம். புதிய ஆட்சி அமைந்தவுடன், முதல் 100 நாட்களுக்கு தேவையான திட்டங்களை நாங்கள் ஏற்கனவே திட்டீவிட்டோம்.” என்று தெரிவித்தார்.