பாகிஸ்தானின் ஒரு பகுதியாக தான், தற்போது உள்ள வங்கதேசம் இருந்தது. ஆனால், அப்போது அப்பகுதியில் வசித்த மக்கள், தங்களுக்கென்று தனி நாடு தேவை என்று போராட்டம் நடத்தி வந்தனர். இதன் விளைவாக, இந்திய ராணுவம், பாகிஸ்தான் உடன் போர் செய்து, வங்கதேசத்தை தனி நாடாக்க உதவியது.
இந்த போர், 1971-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி அன்று நிறைவுப் பெற்று, இந்தியா வெற்றிப் பெற்றது. இந்த நாள், விஜய் திவாஸ் என்ற பெயரில், ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த நாளையொட்டி, பிரதமர் மோடி , தனது எக்ஸ் பக்கத்தில், நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில், “1971-ல் இந்தியாவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை ராணுவ வீரர்கள் பெற்று தந்தனர். அவர்களின், தைரியம் மற்றும் தியாகத்திற்கு நாம் மரியாதை செலுத்துகிறோம்.
அவர்களது தன்னலமற்ற அர்ப்பணிப்பும், உறுதியான நிலைபாடும், நாட்டை பாதுகாத்தது. மேலும், நமது நாட்டிற்கு புகழையும் பெற்றுத் தந்தது. ராணுவ வீரர்களின் வீரத்தையும், அவர்களது அசைக்க முடியாத மனநிலையையும், பேசுவதற்ககாக அர்பணிக்கப்பட்ட நாள் இது.
அவர்களது தியாகம், இன்றைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும். மேலும், நமது நாட்டின் வரலாற்றில், எப்போது நிலைத்து நிற்கும்” என்று கூறியிருந்தார்.
இந்த பதிவு, இந்திய மக்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், பதிவை பார்த்த வங்கதேச மக்கள், பிரதமர் மோடியை விமர்சித்து வருகின்றனர்.
அதாவது, “இது வங்கதேசத்தின் போர். இதில், இந்தியா வெறும் கூட்டாளி மட்டும் தான். ஆனால், இது இந்தியாவின் போர் என்றும், அதன் வெற்றி என்றும், பிரதமர் மோடி கூறி வருகிறார். மேலும், வங்கதேசத்தை அவர் தனது பதிவில் புறக்கணித்துவிட்டார்” என்று, தங்களது சமூக வலைதள பதிவுகளில், வங்கதேச அரசியல் பிரபலங்கள் கூறி வருகின்றனர்.