‘இந்தியா’ ஒன்றிணைந்து ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும்: ராகுல்காந்தி!

மத்திய அரசு ஏழைகளுக்குச் செவி சாய்ப்பது கூட இல்லை. இத்தகைய காலம் மாறும். இந்தியா ஒன்றிணைந்து ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் அமைந்துள்ள ஆசாத்பூர் காய்கறி சந்தைக்கு சென்றார். அங்குள்ள காய்கறி, பழ வியாபாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். தக்காளி உள்பட காய்கறிகளின் விலைஉயர்வால் ஏற்பட்ட தாக்கம், பாதிப்புகள் குறித்தும் வியாபாரிகளிடம் அவா் கேட்டறிந்தார். ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் எடுக்கப்பட்ட விடியோவை நேற்று (திங்கள்கிழமை) பகிர்ந்தார்.

அந்தப் பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டதாவது: ஆசாத்பூா் சந்தையின் சிறப்பு அம்சமானது அதன் நல்லிணக்கமே. நாட்டின் பல்வேறு பிராந்தியம், மதம் மற்றும் ஜாதியைச் சோ்ந்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அங்கு பணியாற்றுகின்றனா். தொழிலில் போட்டியிருந்தாலும் மரியாதைக்கு குறைவில்லை.

அங்கு பணிபுரியும் ஜதா சங்கா் என்ற தொழிலாளி கடந்த ஒரு வருடமாக அவருடைய சொந்த ஊருக்குச் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்திக்கவில்லை என்றார். சொந்த ஊா் திரும்பினால் அவா் வேலையை இழக்கும் அபாயம் ஏற்படும். அவரது வருவாய் பாதிக்கும். நாட்டின் தற்போதைய பணவீக்க சூழலில் வாழ்வது அவருக்கு மேலும் கடினமாகும்.

நஷ்டத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு கடைக்காரா், வாரத்துக்கு இரண்டிலிருந்து மூன்று நாள்கள் பட்டினியில் தூங்குவதாகத் தெரிவித்தார். அனைவருக்கும் வெவ்வேறு பிரச்னைகள் இருந்தாலும் அவை ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. சரக்கு-சேவை வரி(ஜிஎஸ்டி), பணவீக்கத்தால் வியாபாரிகள் பாதிக்கப்படும் அதே வேளையில், பணவீக்கத்தால் ஏற்படும் வேலைவாய்ப்பின்மையால் தொழிலாளிகள் பாதிக்கப்படுகின்றனா்.

தேசத்தின் ஏழைகளின் பிரச்னைகளைத் தீா்ப்பது ஒருபுறம் இருக்க, மத்திய அரசு ஏழைகளுக்குச் செவி சாய்ப்பது கூட இல்லை. இத்தகைய காலம் மாறும். இந்தியா ஒன்றிணைந்து ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும் என ராகுல் குறிப்பிட்டிருந்தார்.

RELATED ARTICLES

Recent News