அஜித், தமன்னா, சந்தானம் ஆகியோர் நடிப்பில், சிவா இயக்கத்தில் முதன்முறையாக உருவான திரைப்படம் வீரம். நீண்ட நாட்களுக்கு பிறகு, கிராமத்து பின்னணியில் அஜித் நடித்திருந்த இந்த திரைப்படம், பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில், இந்த திரைப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
கிஸி கி பாய், கிஸி கி ஜான் என்ற பெயரில் உருவாகி வரும் இந்த படத்தில், சல்மான் கான் ஹீரோவாக நடித்து வருகிறார். இதற்கிடையே, இப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று, சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் உள்ள நடன அசைவுகள், தென்னிந்திய கலாச்சார உடையான வேட்டி சட்டையை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுமட்டுமின்றி, முன்னாள் கிரிக்கெட் வீரர் லஷ்மன் சிவராமகிருஷ்ணன், இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது நமது தென்னிந்திய கலாச்சாரத்தை மிகவும் கேலி செய்கிறது மற்றும் இழிவுபடுத்துகிறது. மிகவும் அபத்தமான செயல். அது லுங்கி அல்ல, அது வேட்டி . நமது கலாச்சார உடையானது அருவருப்பான முறையில் காட்டப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.