இந்தியர்களின் ரத்தத்தில் கலந்த விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். நாடு முழுவதும், இந்த விளையாட்டுக்கான ரசிகர்கள் கூட்டம் தான் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்த ரசிகர் பட்டாளத்திற்கு ஏற்றாற்போல், ஆடவருக்கான இந்திய அணியும் சிறப்பாக விளையாடி வருகிறது.
இதேபோல், மகளிருக்கான அணியும், தங்களது வெற்றி ஆட்டத்தை தொடங்கியுள்ளது. அதாவது, 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி, மலோசியாவில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியில், இந்திய அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் இன்று மோதின.
இதில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் இருந்தே மிகவும் சொதப்பலாக விளையாடிய தென் ஆப்ரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில், 10 விக்கெட்டுக்களை இழந்து, 82 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இந்த எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய பேட்டர்கள், 11.2 ஓவர்கள் முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு, 84 ரன்களை குவித்து, சாம்பியன் பட்டம் பெற்றனர்.
மேலும், ஓபனராக களமிறங்கிய கொங்காடி த்ரிஷா, அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்திருந்தார். 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான மகளிர் பிரிவில், இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.