காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதி நகரங்களில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 220 இஸ்ரேலியர்கள் சிறைபிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களில் காசாபகுதியில் இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 14,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இருதரப்புக்கும் இடையே 17-வது நாளாக போர் நீடித்து வருகிறது.
இந்நிலையில், காசாவின் குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாக காசா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜபாலியா அகதிகள் முகாம் அருகில் உள்ள அல் ஷுஹாபா பகுதியில் இருந்த கட்டிடத்தின் மீதான இந்தத் தாக்குதலில் அருகிலுள்ள கட்டிடங்களும் அழிக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 117 குழந்தைகள் உட்பட 266 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.