கடந்த திங்கள் கிழமை அன்று, கர்நாடக மாநிலத்தின் அமைச்சகம், புதிய மசோதா ஒன்றை அமலுக்கு கொண்டு வந்தது.
அந்த மசோதாவின்படி, தனியார் நிறுவனங்களில் உள்ள நிர்வாகம் சார்ந்த பதவிகளில், கன்னடர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், நிர்வாகம் சாராத பதவிகளில், 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
கர்நாடக அரசின் இந்த மசோதா, அம்மாநில இளைஞர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்திருந்தாலும், தனியார் நிறுவனங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில், துணை முதலமைச்சர் டி.கே.சிவராஜ்குமார், செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதலீட்டாளர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். பல முதலீட்டாளர்கள் கர்நாடகாவிற்கு வரவேண்டும். மேலும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் திறமையான இளைஞர்கள் சிலர் உள்ளனர். அவர்களும், கர்நாடகவில் பணியாற்ற வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து, “வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்து பணியாற்றுவதால், பெங்களூரின் மக்கள் தொகை 1.4 கோடியாக அதிகரித்துள்ளது. நாங்கள் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. உள்ளூரில் வேலை செய்யும் மக்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம்” என்று கூறினார்.