17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கியது.
நேற்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சஹா 19 ரன்களும், கில் 31 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து சாய் சுதர்சன் 45 ரன்கள் விளாசினார். அதன் பின்னர் வந்த வீரர்கள் சொதப்பிய நிலையில், ராகுல் திவட்டியா அதிரடியாக 15 பந்துகளில் 22 ரன்கள் எடுக்க குஜராத் அணி 168 ரன்கள் குவித்தது.
சிறப்பாக பந்துவீசிய பும்ரா 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளும், கோட்ஸி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் டக் அவுட் ஆனார். அடுத்து அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா 29 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். நமன் தீர் 10 பந்துகளில் 20 ரன்களும், டேவால்டு ப்ரேவிஸ் 38 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 46 ரன்களும் எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கடைசி ஓவரை மிரட்டலாக வீசிய உமேஷ் யாதவ், மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா, பியூஸ் சாவ்லா விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றியை நிலைநாட்டினார்.
இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. உமேஷ் யாதவ், ஓமார்சாய், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் மோஹித் ஷர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.