மணிப்பூரில் முதலமைச்சர் பைரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கோரி வருகின்றனர். இதற்கு சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடியினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

இதனால் இரண்டு சமூகத்தினர் இடையிலான மோதிலில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 3,000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். மக்களின் வீடுகள், கடைகள் போன்றவை தீக்கிரையாகி உள்ளன. தேவாலயங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. வன்முறை சம்பவங்களால் அந்த மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கலவர பூமியாக மாறியிருந்த மணிப்பூர் மாநிலம் முழுவதும் கைப்பேசி, இணைய சேவை முடக்கப்பட்டன. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் முதலே புகையத் தொடங்கிய பிரச்சனை, உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு கலவரமாக மாறியிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலத்தின் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் இணைத்து இடஒதுக்கீடு வழங்க செய்யப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்தும்படி உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுதான் கலவரமாக வெடித்திருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் மக்கள்தொகையில் 53 சதவீதம் உள்ளவர்கள் மைதேயி சமூகத்தினர். இந்தியாவில் இணைவதற்கு முன்பு மணிப்பூர், மைதேயி இன அரசர்களால்தான் ஆளப்பட்டு வந்தது என்பதைக் குறிப்பிடதக்கது.
ராகுல் சென்றது சரியல்ல:
ராகுலின் மணிப்பூா் பயணத்தை விமா்சித்து, புதுடெல்லியில் பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சம்பித் பத்ரா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மணிப்பூருக்கு ராகுல் செல்ல உள்ளதாக ஊடகத்தில் தகவல் வெளியானது முதல், கடந்த 2, 3 நாள்களாக அந்த மாநிலத்தில் மாணவா் சங்கங்கள் உள்பட பல்வேறு சமூக அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
மணிப்பூரில் நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, சுராசந்த்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்லுமாறு ராகுலுக்கு உள்ளூா் நிவாகம் அறிவுறுத்தியது. அதை அவா் கேட்காமல், சாலை வழியாகவே சென்றார். இதுபோன்ற பிடிவாதத்துடன் ராகுல் மணிப்பூா் சென்றது சரியல்ல. அவா் மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டார் என்று தெரிவித்தார்.
பிரதமர் மீது ஸ்டாலின் விமர்சனம்:
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு இல்லத் திருமண விழா, சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. திருமணத்தை நடத்திவைத்து, முதல்வரும், கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியது…
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. அந்த மாநிலம் கடந்த 50 நாள்களாக வன்முறைகளால் எரிந்து கொண்டிருக்கிறது. 150 பேர் இதுவரை பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இதுவரை பிரதமர் அந்தப் பக்கமே போகவில்லை. அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட 50 நாள்களுக்குப் பிறகுதான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்தியிருக்கிறார். இதுதான் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் லட்சணம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
இப்படி மாறி மாறி விமர்சனம் செய்வது நாட்டிற்கு நல்ல அல்ல. எல்லையோர மாநிலத்தில் இதுபோன்ற பதற்றம் நிலவுவது ஆபத்து. வன்முறையைக் கட்டுப்படுத்துவது தீர்வாகாது. பேச்சுவார்த்தை மூலம் புரிதலை ஏற்படுத்துவதுதான் நிரந்தர அமைதிக்கு வழி வகுக்கும்.