இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் என்ற தீவிரவாத அமைப்பிற்கும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த கொடூர தாக்குதலில், இருதரப்பிலும், 900-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
இதுமட்டுமின்றி, 2500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தில், ராணுவ வீரர்கள் மற்றும் தீவிரவாதிகளை காட்டிலும், பொதுமக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு இருக்க, இந்த சம்பவத்தை கொண்டாடும் வகையில், கனடா நாட்டின் டெராண்டோ என்ற பகுதியில், பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
சாதாரண குடிமக்களின் படுகொலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடந்த இந்த பேரணி, அங்கிருக்கும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை அளித்துள்ளது. இந்த பேரணிக்கு ஏன் அனுமதி வழங்கப்பட்டது என்றும் கேள்வி எழுந்தது.
இதுவும், சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்நிலையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், வன்முறையை புனிதப்படுத்தும் எந்தவொரு இயக்கமும், கனடா நாட்டால் ஏற்கப்படாது என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த பதிவை பார்த்த இந்தியர்கள், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக தங்களது கருத்துக்களை கூறினர்.
அதாவது, கனடா நாட்டில் உள்ள இந்தியர்கள் மீது, காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, கனடா பிரதமர் எந்தவொரு கண்டனமும் தெரிவிக்காமல் இருந்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆனால், இப்போது, இந்த சம்பவத்திற்கு மட்டும் கண்டனங்களை கூறி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, பாஜக தலைவர் வைஷாலி பொட்டார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இறுதியாக நீங்கள் விழித்துவிட்டீர்களா? கனடா நாட்டை தீவிரவாதிகளின் புகலிடமாக நீங்கள் மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.