வடஇந்தியாவில் உள்ள மிகமுக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஹோலி. பல வண்ணத்தில் இருக்கும் பொடிகளை எடுத்து, தங்களுக்கு தெரிந்தவர்களின் முகத்தில் வீசி, அன்பை வெளிப்படுத்தும் வகையில், இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை காண்பதற்காகவே, வெளிநாடுகளில் இருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள், இந்தியா வருவதை, வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஹோலி பண்டிகை, கடந்த மார்ச் 8-ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. இதனை காண்பதற்காக, ஜப்பானை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், டெல்லிக்கு வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணை பார்த்த இளைஞர்கள் சிலர், வண்ணப்பொடிகளை எடுத்து பூசுவதாக சொல்லி, அத்துமீறி நடந்துக் கொண்டுள்ளனர்.
இதனை சுதாரித்துக் கொண்ட ஜப்பான் பெண், அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால், அவரை அங்கிருந்து செல்லவிடாமல் தடுத்த அந்த இளைஞர்கள், தொடர்ந்து, ஆபாசமாக நடந்துக் கொண்டனர். இதனால் வேறு வழியே இல்லை என்று நினைத்த அவர், பளார் பளார் என்று அவர்களை அறைந்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
இதுதொடர்பான, வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலான நிலையில், இளைஞர்கள் 3 பேரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற சிலரையும், காவல்துறையினர் தேடி வருகின்றனர்.