பொங்கல் பண்டிகை நாளை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக பண்டிகை என்றாலே பூக்கள் தான் முதலிடம் வகிக்கிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அதேசமயம் வரத்து குறைவால் நெல்லையில் பூக்களின் விலையும் வரலாறு காணாத வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நெல்லை மாநகரின் பிரதான பூ மார்க்கெட்டான நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது மார்க்கெட் என்பதால் சற்று விலை குறைவாக இருக்கும் என்று எண்ணி பொதுமக்கள் ஆர்வமுடன் பூ வாங்க வந்தனர். ஆனால் விலையை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் அதாவது நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரே நாளில் 2000 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிலோ மல்லிகைப் பூ 6000 ரூபாய்க்கு விற்பனையானது.
அதேபோல் பிச்சிப் பூ நேற்று கிலோ 2500 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரே நாளில் 1500 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிலோ பிச்சிப் பூ நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் வழக்கமான நாட்களில் 100 ரூபாய்க்கு விற்பனையாகும் அரளி பூ இன்று கிலோ 600 ரூபாய்க்கும் 30 ரூபாய்க்கு விற்பனையாகும் கேந்தி பூ இன்று அதிகபட்சம் 120 ரூபாய் வரைக்கும் விற்பனையானது.
தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களை காட்டிலும் நெல்லை மாவட்டத்தில் தான் மல்லிகைப்பூ அதிகபட்சமாக 6000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விலை உயர்வால் பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிலோ கணக்கில் பூ வாங்கும் வியாபாரிகள் இன்று ஏற்பட்ட விலை உயர்வால் மிகவும் குறைவான அளவில் பூக்களை வாங்கிச் சென்றனர். மேலும் குறைந்த அளவு பூக்களை வாங்கி தெருத்தெருவாக விற்பதால் தங்களுக்கு லாபம் இருக்காது என்று வேதனை தெரிவித்தனர். மேலும், இந்த விலை உயர்வால் தங்களுக்கு எந்த லாபமும் கிடையாது. 100 நாள் வேலையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் தான் பூக்களின் விலை உயர்ந்துள்ளது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.