தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் இரண்டு பேரும், விசாரணை என்ற பெயரில், காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதில், மரணம் அடைந்தனர்.
இந்த லாக்கப் மரணம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட காவலர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, கீழமை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், 2 மாதத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
அதாவது, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி, துணை ஆய்வாளர் ரகு கணேஷ், மதுரை கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெயராஜின் மனைவி, இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ரகு கணேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை, 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும், கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.