நாம் தமிழர் கட்சியில் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வந்தவர் காளியம்மாள். கட்சியின் பல்வேறு பணிகளில், தீவிரமாக பணியாற்றி வந்த இவர், கடந்த சில மாதங்களாக, எந்தவொரு பணியிலும் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலிலும், இவர் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. இதனால், கட்சியின் தலைமையிடம், இவருக்கு கருத்து முரண் ஏற்பட்டதாக, கிசுகிசுக்கப்பட்டது. இதற்கிடையே, கட்சியின் பொறுப்புகளை குறிப்பிடாமல், நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில், காளியம்மாளின் பெயர் இடம்பெற்றிருந்தது.
இதனால், இவர் கட்சியில் இருந்து விலகுகிறாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வழியில், என்னுடைய பயணம் தொடரும் என்றும், அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.