ஜெயம் ரவி நடிப்பில் உருவான தாம் தூம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத். இதையடுத்து, பாலிவுட்டிற்கு சென்ற அவர், அங்கு பெரிய நடிகையாக வளர்ந்து வந்தார்.
இதையடுத்து, தலைவி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய கங்கனா, தற்போது சந்திரமுகி 2-ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, எமர்ஜென்சி என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தில், இந்திரா காந்தி வேடத்தில் தான் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் ஆரம்பத்தில் உணவகம் திறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், சில பொருளாதார காரணங்களால் அது முடியாமல் போனது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எமர்ஜென்சி படத்தை எடுப்பதற்கு, எனது சொத்துக்கள் அனைத்தையும் அடமானம் வைத்துள்ளேன் என்று கூறிய அவர், நான் மும்பைக்கு வரும்போது, வெறும் 500 ரூபாயோடு தான் வந்தேன். இந்த படம் தோல்வி அடைந்தால், நான் பழைய நிலைக்கு தான் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இருப்பினும், தன்னம்பிக்கை இழக்க மாட்டேன் என்றும், சொந்த காலில் தான் நிற்பேன் என்றும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.