கர்நாடகாவில் நடைபெற்று வரும் பாஜக தலைமையின் கீழான ஆட்சி, முடிவுக்கு வர இருப்பதால், தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாஜக தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவடைந்து, இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 6 மணி வரை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, 8.26 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையே, பல்வேறு பிரபலங்கள், தங்களது ஜனநாயக கடமையை காலை முதலே ஆற்றி வருகின்றனர்.
அதன்படி, கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, சிக்காவி பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில், தனது வாக்கை செலுத்தினார். இதேபோன்று, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, ஷிஜாரிபுராவில் உள்ள வாக்குச் சாவடியில், தனது வாக்கை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 100 சதவீதம் பாஜக தான் வெற்றி அடையும் என்றும், 130 முதல் 135 இடங்கள் வரை நிச்சயம் வெல்வோம் என்றும் கூறினார். இவர்களைத் தொடர்ந்து, பெங்களூரு சாந்தி நகரில் செயின்ட் ஜோசப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில், நடிகர் பிரகாஷ்ராஜ் தனது வாக்கை செலுத்தினார்.
வாக்கு செலுத்திய பின், ட்விட்டரில் பதிவிட்ட அவர், “காலை வணக்கம் கர்நாடகா.. வகுப்புவாத அரசியலுக்கு எதிராகவும், ஊழல் அரசுக்கு எதிராகவும், எனது வாக்கை அளித்துள்ளேன். நீங்களும் மனசாட்சி உடன், வாக்கை செலுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி பெங்களூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். மேலும், பெங்களூர் ஜெய நகர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில், மந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வாக்கை செலுத்தினார்.