கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் பாஜக தலைமையின் கீழான ஆட்சி, சமீபத்தில முடிவுக்கு வந்தது. இதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையம் சார்பில், சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர். பாஜக சார்பில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும், பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள், மே 13-ஆம் தேதி அன்று, எண்ணப்பட உள்ளது.