ஜாதகத்தால் வந்த வினை.. காதலனை கொன்ற காதலி!

கன்னியாகுமரி எல்லையை ஒட்டி அமைந்துள்ள கேரளாவின் பாறசாலை பகுதியை சேர்ந்தவர் க்ரீஷ்மா. இவரும், மூரியங்கரை பகுதியை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவரும், காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி அன்று, வீட்டில் யாரும் இல்லை என்று கூறி, தனது காதலனை க்ரீஷ்மா வீட்டிற்கு அழைத்துள்ளார்.

வீட்டிற்கு வந்து சில மணி நேரங்கள் ஆன பிறகு, ஷாரோன் ராஜ் வயிற்று வலியால் துடித்துள்ளார். பின்னர், தனது நண்பனை உதவிக்கு அழைத்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் சென்றுள்ளார்.

மறுநாள் அவரது வாயில் புண்கள் ஏற்பட்டன. தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாகவே, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக ஷாரோன் ராஜ் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவர் அண்மையில் இறந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், க்ரீஷ்மாவிடம் விசாரணை நடத்தி வந்தனர். அதில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், க்ரீஷ்மா உண்மையை சொல்லத் துவங்கியுள்ளார்.

க்ரீஷ்மா கூறியது பின்வருமாறு:-

”நானும், ஷாரோன் ராஜூம் தீவிரமாக காதலித்து வந்தோம். ஒரு நாள் ஜோசியர் ஒருவரிடம், ஜாதகம் பார்க்க சென்றிருந்தேன். அதில், என்னுடைய முதல் கணவர் உயிரிழந்து விடுவார் என்று கூறியதால், எதிர்காலம் பற்றி பயம் வந்துவிட்டது. எனவே, என் காதலனை யாருக்கும் தெரியாமல், கடந்த மாதம் திருமணம் செய்துக் கொண்டேன்.

பின்னர், அவரை கொலை செய்துவிட்டு, வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துக் கொள்ள நினைத்தேன். அதன்படி, கஷாயத்தில், பூச்சி மருந்தை கலந்துக் கொடுத்து, அவனை கொலை செய்துவிட்டேன்”

இவ்வாறு தனது வாக்குமூலத்தில் அந்த பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.