அரசு வேலை கிடைத்த நபரை கடத்தி சென்று திருமணம்…பெண்ணின் தந்தை அடாவடி

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கெளதம் குமார் (26). எம்ஏ எம்.பில். பட்டதாரியான இவர், ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் திருமணத்திற்கு கடந்த ஒரு வருடமாக பெண் தேடி வந்துள்ளார். ஆனால், சரியாக வரன் அமையாமல் இருந்தது.

இதனிடையே, ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே அரசுப் பணிக்கு கெளதம் குமார் முயற்சித்து வந்துள்ளார். அண்மையில் நடந்த பிகார் அரசு தேர்வாணையத் தேர்வில் கெளதம் குமார் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவருக்கு ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை கெளதம் குமார் தனது பணி நியமன ஆணையை வாங்க சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பயந்து போன அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கெளதம் குமார் திருமண கோலத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். போலீஸாரை பார்த்ததும் மணமேடையில் இருந்து அலறிக் கொண்டு அவர்களிடம் ஓடி வந்த கெளதம் குமார், தன்னை பெண்ணின் தந்தை, துப்பாக்கி முனையில் கடத்தி வந்து கட்டாயம் திருமணம் செய்து வைத்ததாக கூறி அழுதார். இதையடுத்து, பெண்ணின் தந்தை ராகேஷ் ராயை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

அப்போது தனது மகளுக்கு ஒரு அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளையை தான் கட்டி வைக்க வேண்டும் என சிறு வயதிலேயே உறுதி எடுத்ததாகவும், அதனால் அரசு வேலை கிடைக்கப் பெற்ற கெளதம் குமாரை கடத்திச் சென்று தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, கட்டாயத் திருமணம் என்ற பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கெளதம் குமாரை மீட்டு வந்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News