கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த மாதம் 28-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் 4.8 கிலோ எடையிலான தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதையடுத்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் நடத்திய விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தர்மபுரியைச் சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. அவர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.
இதையடுத்து கொள்ளையன் விஜயை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விஜயின் மனைவி நர்மதா மற்றும் மாமியார் யோகராணி ஆகியோரிடமிருந்து 455 பவுன் நகைகள் மீட்கப்பட்டு அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். மீதம் 25 பவுன் நகைகள் மட்டுமே மீட்க வேண்டியுள்ளது.
இதனிடையே தர்மபுரியில் வசித்துவரும் விஜயின் தந்தை முனிரத்தினத்திடம் நேற்று தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் வேறு வழக்குகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர் வீடு திரும்பிய முனிரத்தினம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைச்து வந்த போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிதோனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.