ஃபென்சல் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகின்றது.
இதனால் திருவண்ணாலை மாநகராட்சியைச் சுற்றியுள்ள ஏரி, குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்ததால் நகரமே வெள்ளக்காடாகக் மாறியது.
இந்த நிலையில், திருவண்ணாமலை கோவில் பின்புறம் மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் 11-ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்ததில் 3 வீடுகள் தரைமட்டமானது. இதில், ராஜ்குமார், அவரது மனைவி, 5 சிறுவர்கள் என 7 பேர் சிக்கி தவித்து வருகின்றனர்.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு 15 மணிநேரமாக 7 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, ஏற்கெனவே நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு அருகாமையில் இன்று காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.