தேனியில் வீட்டு மாடியில் சிறுத்தை தோல் : தலைமறைவாக இருந்த நபர் கைது..!

தேனியில் வீட்டு மாடியில் சிறுத்தை தோல் கைப்பற்றப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டியன்(50) என்பவர் வீட்டின் மாடியில் கடந்த நவம்பர் 17ஆம் தேதியன்று சிறுத்தை தோல் ஒன்று வனத்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த தேனி வனத்துறையினர் சுமார் 25 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த துரைப்பாண்டியனை வனத்துறையினர் சென்னையில் நேற்று கைது செய்து தேனிக்கு கொண்டு வந்தனர்.

தேனி வனச்சரகர் அலுவலகத்தில் அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவரை அழைத்துச் சென்றனர்.

சிறுத்தை தோல் கைப்பற்றப்பட்ட வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? வேட்டையாடப்பட்டதா? என துரைப்பாண்டியனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி பிறகு தான் தெரியவரும் என வனத்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.