நாடு முழுவதும் இதுவரை மொத்தம் ரூ.8,889 கோடி அளவுக்கு பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், போதைப் பொருட்கள் மட்டும் ரூ.3,958.85 கோடி மதிப்பில் கைப்பற்றப்பட்டுள்ளன. குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, இந்திய கடலோர காவல்படை ஆகியவை ரூ.892 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்தன.
வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட இலவச பொருட்கள் ரூ.2,006 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன. தங்கம், வெள்ளி போன்றவை ரூ.1,260 கோடி மதிப்பில் கைப்பற்றப்பட்டன. ரொக்க பணம் ரூ.849.15 கோடி கைப்பற்றப்பட்டது. மது பானங்கள் 53.97 மில்லியன் லிட்டர் கைப்பற்றப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.815 கோடி.
அதிகபட்சமாக குஜராத்தில் ரூ.1,462 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டன. இங்கு போதைப்பொருட்கள் மட்டும் ரூ.1,188 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டன. ராஜஸ்தானில் ரூ.1,134 கோடி அளவுக்கு பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கர்நாடகாவில் ரூ.175 கோடி மதிப்பிலான மது பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தெலங்கானாவில் ரூ.114 கோடிக்கு ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லியில் ரூ.195 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டன. ராஜஸ்தானில் இலவச பொருட்கள் ரூ.757 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன. நாடு முழுவதும் இதுவரை மொத்தம் ரூ.8,889 கோடி அளவுக்கு பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.