நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 68,321 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7.00 மணி முதல் வாக்குப்பதிவானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும், திரைத்துறை பிரபலங்களும் காலை முதலே ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
அரசியல் தலைவர்கள் வாக்கு செலுத்திய விவரம்:

சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவி துர்கா ஸ்டாலினுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை நெடுங்குளம் ஊராட்சிக் குட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மக்களுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

கரூர் மக்களவைத் தொகுதி க.பரமத்தி ஒன்றியம் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தனது பெற்றோருடன் வந்து வாக்கு செலுத்தினார்.

திண்டிவனம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஶ்ரீ மரகதாம்பிகை அரசு உதவிபெறும் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை 8 மணிக்கு தனது வாக்கைப் பதிவு செய்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார். மனைவி கிருத்திகாவுடன் வந்த உதயநிதி ஸ்டாலின் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினார்.

ஆழ்வார்பேட்டையில் சென்னை மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தனது வாக்கினை பதிவு செய்தார்.