Connect with us

Raj News Tamil

மதத்தை வைத்து பிரதமர் மோடி அரசியல் செய்ய மாட்டார் – ராஜ்நாத் சிங்

இந்தியா

மதத்தை வைத்து பிரதமர் மோடி அரசியல் செய்ய மாட்டார் – ராஜ்நாத் சிங்

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக, ஆளுங்கட்சியினர், எதிர்கட்சியினர் ஆகியோர், ஒருவரையொருவர் மாற்றி மாற்றி விமர்சித்து வருகின்றனர். இவ்வாறு விமர்சிக்கும்போது, நிதானம் தவறும் ஒருசிலர், சில சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்கின்றனர்.

அந்த வகையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வார பகுதியில், பிரதமர் நரேந்திர மோடி பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களின் செல்வங்களை, முஸ்லீம்களுக்கு மீண்டும் விநியோகம் செய்துவிடும் என்று கூறியிருந்தார்.

மேலும், சிறுபான்மையினருக்கு , நாட்டின் சொத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதையும், பிரதமர் மோடி மேற்கோள் காட்டியிருந்தார்.

இதுமட்டுமின்றி, மக்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை, வந்தேறிகளுக்கு கொடுக்க, காங்கிரஸ் திட்டம் தீட்டுகிறது என்றும் பிரதமர் விமர்சித்திருந்தார். இவரது இந்த சர்ச்சைக்குரிய பேச்சு, இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மோடியின் இந்த பேச்சுக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதாவது, கிரேட்டர் நொய்டாவில் உள்ள பிசாடா கிராமத்தில், பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட ராஜ்நாத் சிங், எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்திருந்தார்.

“சகோதரிகளே, சகோதரர்களே.. பிரதமரை இன்று தான் என்று எனக்கு தெரியும் என்று அல்ல.. பல வருடங்களாக, நாங்கள் இருவரும் நல்ல உறவில் உள்ளோம். இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் ஆகியோரை வைத்து, பிரதமர் மோடி எப்போதும் அரசியல் செய்ய மாட்டார். சமூகத்தை பிரிப்பதை வைத்தும், பிரதமர் மோடி அரசியல் செய்ய மாட்டார்.” என்று கூறினார்.

“நம்முடைய சொத்துக்கள் ஆய்வு செய்யப்படும் என்று, காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியதை தான், பிரதமர் கூறியிருந்தார். அவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தால், மக்கள் ஏன் எந்தவொரு எதிர்ப்பும் அதற்கு தெரிவிக்கவில்லை.

சொத்துக்களை ஆய்வு செய்வதன் மூலம், உங்களுக்கு ( காங்கிரஸ் ) என்ன கிடைக்கும்? உங்களுக்கு நாட்டின் சொத்துக்களை சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டுமா? உங்களுக்கு என்ன தான் வேணும்?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ச்சியாக பேசிய அவர், “ மன்மோகன் சிங் நாட்டின் பிரதமராக இருந்தார். நான் இப்போது கூட, அவரை மதிக்கிறேன்.

கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி அன்று, விக்யான் பவனில், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில், நாட்டின் சொத்தில் யாருக்காவது உரிமை உள்ளது என்றால், அது சிறுபான்மையினருக்கு தான். குறிப்பாக, அது முஸ்லீம்களுக்கு சொந்தமானது என்று மன்மோகன் சிங் கூறியிருந்தார்.

இதை நாங்கள் கூறவில்லை.. மன்மோகன் சிங் தான் கூறியிருந்தார். ஆனால், அவர் கூறியதை பிரதமர் சொன்னதற்கு, காங்கிரஸ் கட்சியினர் சலசலப்பை ஏற்படுத்துகின்றனர்” என்று கூறினார்.

“சகோதரிகளே, சகோதரர்களே.. இந்தியாவில் உள்ள வளங்கள் மீதும், சொத்துக்கள் மீதும், நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் சமமான உரிமை உள்ளது.” என்று கூறினார்.

இறுதியாக, இடஒதுக்கீடு தொடர்பாக பேசிய ராஜ்நாத் சிங், “காங்கிரஸ் தலைமையிலான அரசு, சில கமிஷன்களை, முன்பு உருவாக்கியிருந்தது. அந்த கமிஷன்கள், தங்களது அறிக்கையில், OBC-க்களுக்கான 27 சதவீத இடஒதுக்கிட்டில், 6 சதவீதம் தான் முஸ்லீம்களுக்கும், 2 சதவீதம் மற்ற சிறுபான்மையினருக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. நாங்கள் அந்த கமிஷன்களை உருவாக்கவில்லை” என்று கூறினார்.

More in இந்தியா

To Top