“வெறுப்பு பேச்சு.. இதற்கு முன் இப்படியொரு பிரதமரை பார்த்தது இல்லை” – மன்மோகன் சிங்

வரும் 1-ஆம் தேதி அன்று, கடைசி கட்டமாக, 8 மாநிலங்களில் உள்ள 57 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு, தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவுடைய உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வாக்காளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தை, காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “பொதுமக்கள் மத்தியில் பேசும்போது, தனது கண்ணியத்தை குறைத்துக் கொண்ட முதல் பிரதமர் நரேந்திர மோடி தான்” என்று கூறப்பட்டுள்ளது.

“சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவு அல்லது எதிர்கட்சியை டார்கெட் செய்து, மிகவும் கொடூரமான முறையில், வெறுக்கத்தக்க வகையில் இதற்கு முன் எந்தவொரு பிரதமரும் பேசியதே கிடையாது” என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் வளங்களில் இசுலாமியர்களுக்கு தான் முதல் உரிமை உள்ளது என்று மன்மோகன் சிங் கூறியதாக, பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியிருந்தார். இவரது இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அவர், “நான் ஒரு சமூகத்தை உயர்த்தியும், இன்னொரு சமூகத்தை தாழ்த்தியும் பேசியதே இல்லை. ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் ஒரே பதிப்புரிமை அதுதான்” என்று விமர்சித்தார்.

“டெல்லி எல்லையில் பல மாதங்களாக காத்திருந்தபோது, பெரும்பாலும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 750 விவசாயிகள் தங்களது உயிரை தியாகம் செய்தனர்.

லத்தியும், ரப்பர் தோட்டாக்களும் போதாது என்பது போல், போராட்டம் நடத்திய விவசாயிகள் ஒட்டுண்ணி, கிளர்ச்சியாளர்கள் என்று கூறி, வார்த்தை வழியாக அவர்களை பிரதமர் மோடி தாக்கியிருந்தார்.

தங்களை அணுகாமல், தங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 3 விவசாயிகள் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான், அவர்களது ஒரே தேவையாக இருந்தது” என்று கூறினார்.

இறுதியாக, “வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட எதிர்காலத்தை, காங்கிரஸ் கட்சிதான் உறுதிப்படுத்த முடியும். அங்கு, ஜனநாயகமும், அரசியமைப்பும் பாதுகாக்கப்படும்” என்று கூறினார்.

RELATED ARTICLES

Recent News