அண்டை தேசங்களுடன் விவாதத்தையும்,சண்டைகளையும் விட்டுவிட்டு காதலை தேடி ஓட வேண்டும் போல்.என்பதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த வாரம் இந்தியாவை சேர்ந்த அஞ்சு என்ற மணமான பெண் முறைப்படி விசா எடுத்து பாகிஸ்தானில் இருக்கும் காதலன் நஸ்ருல்லாவை காணச் சென்றார். ஃபேஸ்புக் வாயிலாக அறிமுகமான நஸ்ருல்லாவை நேரில் சந்தித்ததும், பாத்திமா என்ற பெயரில் மதம் மாறி அவரையே மணம் முடித்திருக்கிறார் அஞ்சு.
இதைப்போலவே சீனாவிலிருந்தும் ஒரு காதலி, தனது பாகிஸ்தான் காதலனை சந்திப்பதற்காக எல்லை தாண்டி சென்றிருக்கிறார். சீனாவின் காவோ ஃபெங் என்ற 21 வயது இளம்பெண், ’ஸ்னாப் சாட்’ சமூக ஊடகம் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த 18 வயதாகும் ஜாவேத் என்ற இளைஞனுடன் நட்பாகி, பின்னர் காதலில் விழுந்திருக்கிறார்.
கடந்த வாரம் முறையான பயண ஆவணங்களுடன் சாலை மார்க்கமாக கில்ஜித் வழியாக, சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பயணப்பட்டார். முன்கூட்டியே காதலன் ஜாவேத்துக்கு தகவல் தெரிவித்திருந்ததால், அவரும் இஸ்லாமாபாத்தில் முன்னின்று வரவேற்றிருக்கிறார். அங்குள்ள ஜாவேத் உறவினர் வீட்டில் தங்கியிருந்து, இந்தியாவின் அஞ்சு பாணியில் காவோ ஃபெங்கும் கிஸ்வா என்ற பெயரில் மதம் மாறி காதலன் ஜாவேத்தை மணம் முடித்திருக்கிறார்.
3 மாத விசாக்காலம் முடிந்ததும் சீனா திரும்பவிருக்கிறார் காவோ ஃபெங். மேற்படிப்பில் சேர்ந்திருக்கும் ஜாவேத்தும், ஓராண்டு இடைவெளியில் படிப்பை முடித்ததும் காவோ குடும்பத்தினரை சந்திக்க சீனா செல்வாராம். பாகிஸ்தானின் வழக்கமான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் காரணமாக காவோ பாதுகாப்புக்கு கூடுதல் அக்கறை காட்டும் பாகிஸ்தான் அதிகாரிகள், அதன் காரணமாக இளம்சோடிகளின் படத்தை வெளியிடவும் தடை போட்டிருக்கின்றனர்.