மத்திய பிரதேசம் மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள பைராக்கர் எனும் கிராமத்தில் பட்டாசு ஆலை மற்றும் சேமிப்பு கிடங்கில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 60 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த கோர சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக துயரமான செய்தி வந்துள்ளது. அமைச்சர் உதய் பிரதாப் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்தூர் மற்றும் போபாலில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீய காய பிரிவுகள் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.