நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளில் கடந்த மே 7ஆம் தேதி 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் பாஜகவை சேர்ந்த வினய் மெஹர் தனது மகனை வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அந்தச் சிறுவன், தாமரை சின்னத்திற்கு அருகில் உள்ள பட்டனை அழுத்துகிறார். உடனே, விவிபாட் இயந்திரத்தில் தாமரை சின்னம் காட்டப்படுகிறது. இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து, வாக்குச்சாவடிக்குள் சிறுவன் அனுமதிக்கப்பட்டது எப்படி? வாக்குச்சாவடிக்குள் மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை உள்ள நிலையில் வாக்களிப்பதை வீடியோ எடுத்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் வாக்குச்சாவடி பணியாளர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை இப்படித்தான் இருக்கிறது என காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.