மகாராஜா என்ற நபர், தனது மகளுடன் வசித்து வருகிறார். ஒரு நாள், அவர் தனது லட்சுமி காணாமல் போய்விட்டதாகவும், கண்டுபிடித்து தர வேண்டும் என்றும், காவல்துறையில் புகார் அளிக்க வருகிறார்.
அதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடையும் காவல்துறையினர், லட்சுமியை கண்டுபிடித்தார்களா? இல்லையா? இறுதியில் என்ன ஆனது என்பதுதான் மீதிக் கதை..
ஒரு திரைப்படத்தின் திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்றால், அது உலகத்தை கட்டமைத்து, அந்த உலகத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும், ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
அவ்வாறு, மகாராஜாவில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு உலகம், மிகவும் கச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. Really.. a well written script..
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியையும், அவ்வளவு ஏன் ஒவ்வொரு வசனத்தையும் கூட, நாம் எடுத்துவிட்டால், கதை மாறிவிடும். அந்த அளவிற்கு, படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியையும், இயக்குநர் மிகவும் அற்புதமாக எழுதியுள்ளார்.
குறிப்பாக, ஒரு காட்சியில், விஜய்சேதுபதி தான் பணிபுரியும் கடைக்கு வரும் வாடிக்கையாளருக்கு ( அனுராக் காஷய்ப் ) தாடியை ட்ரிம் செய்ய முயல்வார். ஆனால், அந்த சமயத்தில் ட்ரிம்மரின் பேட்டரி காலி ஆகிவிடும்.
அவ்வாறு அந்த பேட்டரி காலி ஆகாமல் இருந்திருந்தால் கூட, இந்த கதையில் நிச்சயம் மாற்றம் நடந்துவிடும். அந்த அளவுக்கு மிகவும் நுனுக்கமான ஒரு திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.
படத்தின் முதற்பாதி வரை, சீட்டுக் கட்டை களைத்துவிட்டதுபோல், காட்சிகளை விதவிதமாக களைத்து போடும் பிலோமின்ராஜ் ( எடிட்டர் ), இரண்டாவது பாதியில் அதனை ஒன்று சேர்க்கும்போது, புல்லரிப்புகள் தான் மிஞ்சுகின்றன.
நடிப்பை பொறுத்தவரை, விஜய்சேதுபதி, அவருக்கு மகளாக நடித்த பெண் ( மன்னிக்கவும் பெயர் தெரியவில்லை ), அனுராக் காஷ்யப், சிங்கம் புலி என்று அனைவரும், மிகவும் கச்சிதமாக நடித்துள்ளனர்.
ஒரு காட்சியில், தான் தேடி வந்த லட்சுமி எப்படி காணாமல் போனது என்று விஜய்சேதுபதி விவரிப்பார்.. அந்த காட்சி, அதன்பிறகு, அனுராக் காஷ்யப் க்ளைமேக்ஸில் கொடுத்த நடிப்பு, ஒரு முக்கியமான காட்சியில் சிங்கம் புலியின் வித்தியாசமான நடிப்பு, என்று சொல்லிக் கொண்டே போகலாம்..
இவ்வாறு ஆச்சரியங்களை அள்ளி தெளித்துக் கொண்டே சென்ற இந்த திரைப்படம், நாம் எதிர்பார்க்கும் வகையிலேயே காட்சிகளை நகர்த்தினாலும், அதிலும் சிறுசிறு ட்விஸ்ட்களை வைத்து ஈர்க்கிறது.
இவை அனைத்தையும் தாண்டி, படம் முடிந்த விதத்தில், ஒரு கலையாக படம் சிந்திக்க வைக்கிறது. அதாவது, நாம் செய்த பாவங்கள் நமது தலையின் மேலே தான் இருக்கும் என்ற ஆழமான கருத்தையும், செய்த பாவங்கள் ரத்தத்தின் வழியாக சுத்தம் செய்யப்படுகிறது என்பதையும், மிகவும் நேர்த்தியான வகையில், ஒரே ஷாட்டில் இயக்குநர் சொல்லியிருப்பது அருமை.
இப்படி பல்வேறு பாசிட்டிவ்வான விஷயங்கள் படத்தில் இருந்தாலும், கொரிய மொழியில் உருவாக்கப்பட்டிருந்த Oldboy என்ற கல்ட் கிளாசிக் படத்தின் சில தாக்கங்களை விட்டுச் சென்றிருக்கிறது. அதாவது, அந்த OldBoy திரைப்படம், அவர்களை Inspire செய்திருப்பதால், நமது பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில், சில மாற்றத்துடன், மகாராஜாவில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தத்தில், இந்த மகாராஜா , விஜய்சேதுபதியின் கிரீடத்தில் சேர்க்கப்பட்ட இன்னொரு வைரக்கல்..