Connect with us

Raj News Tamil

“முடிவு எடுப்பதற்கான நபர் அவர் கிடையாது” – காங்கிரஸ் மாநில தலைவரை தாக்கிய தேசிய தலைவர்!

இந்தியா

“முடிவு எடுப்பதற்கான நபர் அவர் கிடையாது” – காங்கிரஸ் மாநில தலைவரை தாக்கிய தேசிய தலைவர்!

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிபாத் பகுதியில் பெர்ஹாம்பூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கலந்துக் கொண்டார். அப்போது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியை விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “ இது எல்லாம் சரி தான். இது என்னுடைய தத்துவம் சார்ந்த எதிர்ப்பு. யாராவது காங்கிரஸ் கட்சியை முடித்து வைக்க முயற்சிப்பார்கள். நான் அவர்களை வரவேற்பேன் என்பது நிச்சயம் நடக்கவே நடக்காது.

எனக்கு அவர் மீது எந்தவொரு பகையும் கிடையாது. இது ஒரு தத்துவம் சார்ந்த எதிர்ப்பு தான். மேற்கு வங்கத்தில் என்னுடைய கட்சியை பாதுகாப்பதற்கான சண்டை தான் இது. என்னால் இந்த சண்டையை தடுத்து நிறுத்த முடியாது. ஏனென்றால், நான் காங்கிரஸ் கட்சியின் காலாட் படை வீரர் மட்டுமே” என்று கூறியுள்ளார்.

இவரது இந்த பேட்டியால், காங்கிரஸ் கட்சியினர் இடையே, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா கூட்டணியின் பலம் இழந்துவிடுமோ என்றும் சிலர் கருத்து கூறி வந்தனர்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பல்வேறு கேள்விகளுக்கு தனது பதில்களை கொடுத்தார்.

அப்போது பேசிய அவர், “வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன் என்று மம்தா பானர்ஜி முதலில் கூறினார். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தால், நான் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன் என சமீபத்தில் கூறினார். இதன்மூலம், மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியுடன் தான் இருக்கிறார் என்பது தெளிவாகியுள்ளது” என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க தலைவர் சௌத்ரியின் பேச்சு குறித்து, கார்கே பேசும்போது, “முடிவு எடுப்பதற்கான நபர் அவர் கிடையாது. முடிவு எங்களால் தான் எடுக்கப்படும். நாங்கள் என்ன முடிவு செய்கிறோமோ, அதனை கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். அதனை யாராவது பின்பற்றவில்லையென்றால், கட்சியில் இருந்து வெளியேறலாம்” என்று கூறினார்.

More in இந்தியா

To Top