பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் 9 வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ., மற்றும் அக்கட்சி கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் 8 பேர் புறக்கணித்தனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்குவங்க முதலவர் மம்தா பானர்ஜி சிறிது நேரத்திலேயே வெளிநடப்பு செய்தார்.
இதுகுறித்து நிருபர்களிடம் மம்தா கூறியதாவது: நிதி ஆயோக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் நான் மட்டுமே கலந்து கொண்டேன். ஆனால், கூட்டத்தில் என்னை 5 நிமிடம் கூட பேச அனுமதிக்கவில்லை. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தேன். என்னை பேசுவதற்கு அனுமதி மறுத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய அரசு அவமதிக்கிறது. மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.