உத்தரபிரதேச மாநிலம் எடா மாவட்டத்தில் உள்ள கிரியா பாமரன் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன் சிங். இவர் ஃபருக்காபாத் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடைபெற்றபோது, பாஜகவிற்கு 8 முறை வாக்களித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோவை, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, தேர்தல் ஆணையத்தின் நம்பக்தன்மையை கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், ராஜன் சிங் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது, உள்ளிட்ட 171-F ( தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்தல் ), ஐ.பி.சி. 419 ( ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் ) , 128, 132, 136 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய உத்தரபிரதேச தலைமை தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா, “ வைரலான வீடியோவில் பல முறை வாக்கு செலுத்திய நபர், அனில் சிங் என்பவரின் மகன் ராஜன் சிங் ஆவார். இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்” என்று கூறினார்.
மேலும், அந்த வாக்கு சாவடி மையத்தில் பணியில் இருந்த உறுப்பினர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், தேர்தல் ஆணையத்திடம், மறுதேர்தல் நடத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், அவர் கூறியுள்ளார்.